கார்–மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலி 6 பேர் படுகாயம்
தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஒருவர் பலியானார். 6 பேர் படுகாயமடைந்தனர்.
தேவகோட்டை,
தேவகோட்டையை சேர்ந்தவர் ஷோபனா கணேசன். இவர் தேவகோட்டை வர்த்தக சங்க பிரமுகராக உள்ளார். நேற்று தேவகோட்டையில் இருந்து தனது நண்பர் கண்டதேவியை சேர்ந்த சொர்ணலிங்கம் என்பவருடன் காரில் காரைக்குடிக்கு சென்றார். அப்போது கோவையில் இருந்து தேவகோட்டைக்கு அண்ணாமலை என்பவர் மற்றொரு காரை ஓட்டி வந்தார்.
திருச்சி–ராமேசுவரம் சாலையில் உள்ள கடையாங்காடு விலக்கு அருகே வந்த போது, அண்ணாமலை ஓட்டி வந்த கார் நிலைதடுமாறி ரோட்டில் தாறுமாறாக ஓடி, ஷோபனா கணேசன் ஓட்டி வந்த கார் மீது மோதியது.
தொடர்ந்து காரின் பின்னால் தேவகோட்டை அருகே உள்ள இருமதி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி (வயது 42), ராம்நகரை சேர்ந்த ராமநாதன் ஆகியோர் வந்த மோட்டார்சைக்கிள் மீதும் கார் மோதியது. அதில் ஆரோக்கியசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். ராமநாதன் பலத்த காயமடைந்தார்.
மேலும் காரில் வந்த ஷோபனாகணேசன், சொர்ணலிங்கம், மற்றொரு காரில் வந்த அண்ணாமலை, 2 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆறாவயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.