அண்ணன் கொலைக்கு பழிக்குபழி: அரிவாளால் வெட்டப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு


அண்ணன் கொலைக்கு பழிக்குபழி: அரிவாளால் வெட்டப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 29 Oct 2018 4:00 AM IST (Updated: 29 Oct 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேட்டில் அரிவாளால் வெட்டப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ்(வயது 18). சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே நின்றிருந்த இவரை, மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் படுகாயம் அடைந்த விக்னேஷை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், விக்னேஷ் தனது காதலியை கிண்டல் செய்ததால் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான கணேஷ் (22) என்பவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்து உள்ள அவரை, கணேஷின் தம்பி பிரகாஷ்(21) தனது நண்பர்களுடன் சேர்ந்து பழிக்குபழி வாங்கவே அரிவாளால் வெட்டியது தெரிந்தது.

இது தொடர்பாக பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களான மோகன்(25), அஜித்(23), ஆரோக்கியம்(22), சாரதி(23) ஆகிய 5 பேரை கோயம்பேடு போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.

இந்தநிலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டு இருந்த வழக்கை, கோயம்பேடு போலீசார் கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story