கயத்தாறு அருகே மயான பாதை கேட்டு சடலத்தை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு


கயத்தாறு அருகே மயான பாதை கேட்டு சடலத்தை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Oct 2018 3:30 AM IST (Updated: 29 Oct 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே மயான பாதை வசதி கேட்டு, சடலத்தை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கயத்தாறு, 

கயத்தாறு அருகே மயான பாதை வசதி கேட்டு, சடலத்தை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயான பாதை

கயத்தாறு தாலுகா கலப்பைபட்டி கிராமம் வழியாக கயத்தாறில் இருந்து புளியம்பட்டி கிராமத்திற்கு 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையும், கலப்பைபட்டி கிராமத்தின் முகப்பில் ஒரு பாலமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கிராமத்துக்கு சொந்தமான மயானம் கிராமத்துக்கு வெளியே உள்ளது. இறந்தவர்களின் சடலங்களை இப்பகுதி மக்கள் அங்குள்ள கால்வாய் வழியாக மயானத்துக்கு எடுத்துச் சென்று வந்தனர்.

தற்போது புதிதாக பாலம் அமைக்கப்பட்டதால் அந்த வழியாக இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சரியான பாதை அமைத்து தர வேண்டும் என்று கூறியதன் பேரில், ஒரு சர்வீஸ் ரோடு விரைவில் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை சர்வீஸ் ரோடு அமைக்கப்படவில்லை.

போராட்டம் நடத்த முயற்சி

இந்தநிலையில், நேற்று முன்தினம் கலப்பைபட்டியை சேர்ந்த நடராஜன் என்பவர் இறந்தார். அவரின் உடலை மயானத்துக்கு கொண்டு செல்ல சரியான பாதை இல்லாததால் அந்த கிராம மக்கள், நடராஜனின் உடலை சாலையில் வைத்து போராட்டம் செய்ய முயன்றனர்.

இதனை அறிந்த புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராம் மற்றும் பாலம் அமைத்த ஒப்பந்ததாரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்களிடம், உங்களது கோரிக்கை 10 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும். தற்போது மட்டும் தனியார் இடம் வழியாக உடலை மயானத்துக்கு கொண்டு செல்லுங்கள் என்றனர். இதையடுத்து நடராஜனின் உடலை தனியார் இடம் வழியாக மயானத்துக்கு கொண்டு சென்றனர்.

சடலத்தை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story