அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வரவேண்டும் அமைச்சர் பாண்டியராஜன் அழைப்பு


அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வரவேண்டும் அமைச்சர் பாண்டியராஜன் அழைப்பு
x
தினத்தந்தி 29 Oct 2018 3:30 AM IST (Updated: 29 Oct 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வரவேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் அழைப்பு விடுத்து உள்ளார்.

நெல்லை, 

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வரவேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் அழைப்பு விடுத்து உள்ளார்.

அருங்காட்சியகத்தில் ஆய்வு

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், பழைய காலத்து சிலைகள், வாள், இரும்பு உள்ளிட்ட பொருட்கள், ஓவியங்கள் உள்ளன. இதை தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், நேற்று நெல்லை அருங்காட்சியகத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, அ.தி.மு.க. புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.2 கோடியில்...

நெல்லை அரசு அருங்காட்சியகம் ரூ.2 கோடியே 8 லட்சத்தில் புதுப்பிக்கப்பட உள்ளது. புதிதாக கேலரி, கலையரங்கம் கட்டப்பட உள்ளது. தரங்கம்பாடி அருங்காட்சியகத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக ரூ.48 கோடியில் அங்கு புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல் திருச்சி, புதுக்கோட்டை அருங்காட்சியகங்களும் தரம் உயர்த்தப்பட உள்ளன. திருவண்ணாமலை, தேனி ஆகிய இடங்களில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்க அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை, கீழடியில் அகழாய்வுகள் நடந்துள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை வைப்பதற்கு அங்கேயே அகழ்வைப்பகம் அமைக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அகழ்வைப்பகம் அமையும் இடங்களில் மற்ற கட்டிடங்கள் இருக்கக்கூடாது. இதை கருத்தில் கொண்டு அகழ்வைப்பகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் அகழ்வைப்பகம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

பழந்தமிழர் கண்காட்சி

மதுரையில் ரூ.56 கோடியில் உலகத்தரம் வாய்ந்த பழந்தமிழர் கண்காட்சி, ஐந்தினை பூங்கா, தமிழ்தாய் சிலையுடன் அமைக்கப்பட உள்ளது. அரியலூரில் திறந்தவெளி மியூசியம் அமைக்கப்பட உள்ளது. அருங்காட்சியகங்களில் மாணவர்களின் கலைதிறன்களை வளர்க்க பல்வேறு பயிற்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களை ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பார்வையிட்டு வருகிறார்கள். இதை 20 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அருங்காட்சியகத்தில் 6 விதமான வரலாற்று கண்காட்சிகள் அமைக்கப்படும்.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்திற்கு திரும்பி வரவேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அழைப்பு விடுத்து உள்ளனர். எனவே கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வரவேண்டும். இந்த ஆட்சி ஜெயலலிதா சொன்ன மாதிரி நூறாண்டு காலம் நீடிக்கும்.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் எப்போது உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். கடந்த முறை உள்ளாட்சி தேர்தலின் போது அ.தி.மு.க.வினர் 1 லட்சம் பேர் பதவிக்கு வந்தார்கள். வருகிற தேர்தலில் அதைவிட அதிகமானோர் பதவிக்கு வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story