திண்டுக்கல் அருகே சம்பவம்: ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம்; தவறி விழுந்த குழந்தை பலி? போலீசார் விசாரணை


திண்டுக்கல் அருகே சம்பவம்: ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம்; தவறி விழுந்த குழந்தை பலி? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Oct 2018 3:15 AM IST (Updated: 29 Oct 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே ஆட்டோவில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. பிறந்த சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

வடமதுரை, 

திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் நேற்று அந்த பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய உறவினர் ஒருவர், அந்த பெண்ணை ஆட்டோவில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொண்டு இருந்தார்.

வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி பகுதியில் ஆட்டோ வந்துகொண்டு இருந்தது. அப்போது அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனையடுத்து அவருக்கு ஓடும் ஆட்டோவிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே பிறந்து சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை, ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர், இறந்த குழந்தையை ஒரு பையில் போட்டு எடுத்து வந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தார். மேலும் அந்த பெண்ணும் சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணுக்கும் அவருடைய கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கணவரை பிரிந்த அந்த பெண், கடந்த 4 ஆண்டுகளாக தனியாக வசித்து வருவது தெரியவந்தது.

இந்தநிலையில் தான் அவருக்கு குழந்தை பிறந்து, ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. அந்த குழந்தை கள்ளத்தொடர்பில் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், குழந்தை ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து இறந்ததா? அல்லது கொலை செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பெண்ணின் உறவினரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story