டாக்டர்கள் வர தாமதம் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை முற்றுகை


டாக்டர்கள் வர தாமதம் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை முற்றுகை
x
தினத்தந்தி 29 Oct 2018 4:30 AM IST (Updated: 29 Oct 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர்கள் வர தாமதம் ஆனதால் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை முற்றுகையிடப்பட்டது.

கல்பாக்கம்,

திருக்கழுக்குன்றம் மற்றும் அதனை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட நோயாளிகள் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தாலுகா அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் 60 படுக்கைகளுடன் வார்டுகள் உள்ளன. தினமும் 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன் அடைந்து வரும் இந்த மருத்துவமனையில் சமீப காலமாக டாக்டர்கள் வழக்கமாக காலை 8 மணிக்கு வருவதில்லை எனவும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் அலட்சியம் காட்டுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

நேற்று காலை 7 மணிக்கு பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் தங்கள் உறவினர்களுடன் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைக்காக காத்திருந்தனர்.

ஆனால் காலை 8 மணிக்கு பணிக்கு வர வேண்டிய மருத்துவர் 10 மணி ஆன பிறகும் மருத்துவமனைக்கு வரவில்லை. இதனால் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாயினர். கடுமையாக பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் மட்டும் வேதனை தாங்க முடியாமல் இந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறி தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக சென்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்பட போலீசார் விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பாதிக்கப்பட்ட நோயாளிகள் கிராமப்புறத்தை சேர்ந்த நாங்கள் டெங்கு காய்ச்சல், பாம்பு கடி மற்றும் தேள் கடி இவற்றால் பாதிக்கப்பட்டு வருகிறோம். இது தவிர விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையும் இங்கு உள்ளது.

இந்த நிலையில் டாக்டர்கள் குறிப்பிட்ட நேரத்தில் இங்கு பணிக்கு வருவதில்லை எனவும் நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை எனவும் குறை கூறினர்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் உடனடியாக மருத்துவர் பணிக்கு வர நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்களிடம் உறுதி கூறினார். பின்னர் 11 மணியளவில் தலைமை மருத்துவர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிகிச்சை அளித்தார்.

இதுகுறித்து தலைமை மருத்துவரிடம் விளக்கம் கேட்டபோது, இன்று பணிக்கு வர வேண்டிய மருத்துவர் முன் அனுமதி பெறாமல் பணிக்கு வரவில்லை எனவும், அதனால் தான் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இனிமேல் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Next Story