புதுச்சேரியில் டெம்போ டிரைவர் படுகொலை; நண்பர் போலீசில் சிக்கினார்


புதுச்சேரியில் டெம்போ டிரைவர் படுகொலை; நண்பர் போலீசில் சிக்கினார்
x
தினத்தந்தி 29 Oct 2018 5:15 AM IST (Updated: 29 Oct 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் டெம்பே டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக நண்பரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை காந்திதிருநல்லூர் சோழன் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சந்துரு (வயது 28). டெம்போ டிரைவர்.

இவர் நேற்று முன்தினம் மாலை முதல் இவர் வீட்டிற்கு வரவில்லை. இந்தநிலையில் இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே காலியிடத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், வடிவழகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்தவரின் கழுத்து மற்றும் உடலில் சில இடங்களில் பாட்டில் குத்து மற்றும் கல்லால் தாக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது. மேலும் அவரது உடலில் சேறும் இருந்தது.

போலீசாரின் விசாரணையில் பிணமாக கிடந்தது சந்துருதான் என்பது தெரியவந்தது. யாரோ கொலையை செய்துவிட்டு கொலையை மறைக்கும் விதமாக அவரது உடலில் சேற்றினை எடுத்து பூசியிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். சந்துருவின் நண்பர்கள் சிலரை பிடித்து விசாரித்தனர். அப்போது சந்துரு நேற்று முன்தினம் மாலை முதல் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தது தெரியவந்தது.

அவர்கள் இருவரும் மதுவை வாங்கி வந்து அந்த காலியிடத்தில் வைத்து குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த நபர் மதுபாட்டில் மற்றும் கல்லால் சந்துருவை தாக்கி உள்ளார்.

இதில் சந்துரு பலியானார். அவர் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்களை மறைக்கும் விதமாக சந்துரு மற்றும் அவரது மோட்டார்சைக்கிளில் சேறு உள்ளிட்டவற்றை பூசி விபத்தால் மரணம் ஏற்பட்டதுபோல் செய்து அங்கிருந்து சென்றிருப்பதும் தெரியவந்து.

கொலை நடந்த இடத்தில் கிடந்த மதுபாட்டில்கள், கற்கள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகளையும் போலீசார் சேகரித்தனர்.

இந்த துணிகர சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர் தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்துக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா வந்து விசாரணை நடத்தினார்.


Next Story