மாமல்லபுரத்தில் வளர்ச்சிப் பணிகள்: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை


மாமல்லபுரத்தில் வளர்ச்சிப் பணிகள்: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 29 Oct 2018 3:45 AM IST (Updated: 29 Oct 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் இந்திய சுற்றுலாத்துறை சார்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள தயாரிக்கப்பட்டுள்ள பெருந்திட்டத்தின்படி, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பெருந்திட்டத்தின் ஆலோசகர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு திட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் மாமல்லபுரத்தில் தற்போதைய நிலை குறித்த அறிக்கையின்படியும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் புதிய பஸ் நிலையம் அமைத்தல், மாமல்லபுரத்தில் சர்வதேச தரத்தில் புராதன சின்னங்கள் உள்ள முக்கிய இடங்களுக்கு செல்லும் சாலைகள் அமைத்தல், பொதுமக்கள் நடந்து செல்ல முக்கிய இடங்களில் தனியாக நடைபாதை அமைத்தல், சைக்கிள்கள் செல்ல சாலை அமைத்தல், கடற்கரைக்கு செல்ல புதிய வழி சாலைகள் அமைத்தல், முக்கிய இடங்களில் மின்விளக்கு வசதிகள், குடிநீர் வசதிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

அர்ச்சுனன் தபசு, கோவளம் சாலை, கடற்கரை சாலை பகுதியில் உள்ள சாலை ஓர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற தீர்மானிக்கப்பட்டது. அர்ச்சுனன் தபசு அருகில் நடைபாதையுடன் புல்வெளி அமைக்க வரைபடம் மூலம் விவாதிக்கப்பட்டது.

மேலும் மாமல்லபுரத்திற்கு அதிக அளவில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வருவதால் அதற்கேற்ற வகையில் தங்குமிட வசதி, வழிகாட்டு பலகைகள் அமைத்தல், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், தகவல் மையம் அமைத்தல், பஸ் நிலையங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கு செல்ல வாகன வசதி செய்து தருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளுதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள சுற்றுலா மையம் போல் புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் பணிகள் மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
இந்திய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் பாரம்பரிய புராதன சின்ன சுற்றுலாத்தலங்கள் மேம்பாடு திட்டத்தின் கீழ் 17 சுற்றுலாத்தலங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அவற்றில் மாமல்லபுரமும் ஒன்று. மாமல்லபுரத்தை வளர்ச்சிப்பணிகள் மேற்கொண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ள இந்திய சுற்றுலாத்துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலாத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் இந்திய அரசாங்கம் இந்த திட்டத்தினை செயல்படுத்த பல்வேறு நிறுவனங்கள் பெருந்திட்டம் தயாரிப்பதற்கான ஆலோசகர்களாக சுற்றுலாத்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எந்தெந்த இடங்களில் எந்த மாதிரியான வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய இதற்கான பூர்வாங்க பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் விரிவான இறுதி திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் மூலம் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.

மாமல்லபுரத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அரசாணை பெறப்பட்டவுடன் பணிகள் தொடங்கப்படும். தற்போது நுழைவு கட்டணம் மற்றும் வாகன நிறுத்தும் இடங்களுக்கு சேர்த்து ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது மட்டுமின்றி மீனவ இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் கிடைக்கும் நிதி மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்பிற்கு ஒதுக்கப்படும் நிதியையும் பயன்படுத்தி தேவையான மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பாரம்பரிய பிரதான சின்ன சுற்றுலா இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான இடங்களை தேர்வு செய்வதற்கு குழுவினருடன் மாவட்ட கலெக்டர் பல்வேறு புராதன இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் மத்திய சுற்றுலா அதிகாரி சைமன் தாமஸ், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர், நரசிம்மன், மாமல்லபுரம் நகர் மேம்பாட்டு கழகம் உறுப்பினர் செயலர் பி.கவிதா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் துவாகரநாத்சிங், சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டல் மேலாளர் வெங்கடேசன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பி.செந்தில், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், சாந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story