தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு இலங்கை எம்.பி. பேட்டி
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என இலங்கை எம்.பி. சதாசிவம் கூறினார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் இலங்கை நுவரெலியாவை சேர்ந்த மத்திய மாகாண சபை எம்.பி. சதாசிவம் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பொருளாதாரம் உள்பட பல்வேறு நிலைகளிலும் இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதிபர் ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிலை உருவானது. அதன் காரணமாக கூட்டணி கட்சியில் இருந்த ராஜபக்சேவை பிரதமராக்கி உள்ளார். இன்னும் சில காலத்துக்கு பின்னர் தான் இலங்கையின் அரசியல் நிலை தெளிவாகும். தமிழர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
நான் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போனவர்கள் அனைவரும் நுவரெலியா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கின்றனர். வடகிழக்கு பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கு இருந்த பிரச்சினை கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. தற்போது ஏதோ ஒரு வழியில் நல்லது நடக்கிறது.
ஆனால் உண்மையான பிரச்சினை இன்னும் தீரவில்லை. இந்த அரசாங்கம் வந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்றார்கள். ஆனால் எதையும் செய்யாமல் 4 ஆண்டுகளை ஓட்டிவிட்டனர்.
ராஜபக்சே இலங்கையின் அதிபரானபோது யுத்தம் வந்தது. அந்த யுத்தத்தை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் தமிழ் மக்களுக்கு எதிரானவர் அல்ல. தமிழக மீனவர்களை தாக்கி, கைது செய்யப்படுவது தொடர்பான பிரச்சினையை, இலங்கை பகுதியை சேர்ந்த மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story