உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்களிடையே மோதல்; 3 பேருக்கு கத்திக்குத்து


உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்களிடையே மோதல்; 3 பேருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 28 Oct 2018 10:30 PM GMT (Updated: 28 Oct 2018 8:34 PM GMT)

உசிலம்பட்டி பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் டிரைவர் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சின்னக்கட்டளையைச் சேர்ந்தவர் அழகு(வயது 46). இவர் வத்திராயிருப்பில் இருந்து தேனி வரை செல்லும் ஒரு தனியார் பஸ்சில் டிரைவாக உள்ளார். இதேபோல் மதுரையில் இருந்து போடி செல்லும் தனியார் பஸ்சில் உசிலம்பட்டி அருகே வில்லாணியை சேர்ந்த ஜெயராமன்(46) என்பவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் 2 பேரும் ஓட்டிச் செல்லும் தனியார் பஸ்கள் அடுத்தடுத்து 5 முதல் 10 நிமிட இடைவேளையில் தேனியில் இருந்து உசிலம்பட்டிக்கு புறப்படுவது வழக்கம். இதில் யார் முந்திச்செல்வது என்பது தொடர்பாக அவர்களுக்குள் நேற்று முன்தினம் தேனி பஸ் நிலையத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த அழகு, ஜெயராமனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கத்தியுடன் உசிலம்பட்டி பஸ் நிலையத்தில் காத்திருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அப்போது ஜெயராமன் தனது பணியை மதியம் முடித்து விட்டு பஸ்சை விட்டு உசிலம்பட்டி பஸ் நிலையத்தில் இறங்கியுள்ளார். முன்னதாக அவரது வருகைக்காக தன்னுடன் பணிபுரியும் டிரைவர் நண்பர்களுடன் காத்திருந்த அழகு, ஜெயராமனை கத்தியால் குத்தினார். இதனைபார்த்த ஜெயராமன் ஓட்டிவரும் பஸ்சில் செக்கராக பணிபுரியும் நக்கலப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தீபக்(21) மற்றும் பஸ் நிலையத்தில் இருந்த ஜெயராமனின் உறவினர் வில்லாணியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் என்ற மாணிக்கத்தேவர்(30) என்பவரும் தடுக்க வந்தனர். அப்போது ஜெயராமன் தரப்பினருக்கும், அழகு மற்றும் அவரது நண்பர்களும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் தீபக், மாணிக்கத்தேவர் ஆகியோரை அழகு கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.

இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் கத்திக்குத்தில் காயமடைந்த ஜெயராமன் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து டிரைவர் அழகுவை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தேனியை சேர்ந்த முத்தையா, முத்துக்குமார், சின்னக்கட்டளையை சேர்ந்த குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Next Story