தேவாரம் வனப்பகுதியில் உலா வரும் கும்கி யானைகள்


தேவாரம் வனப்பகுதியில் உலா வரும் கும்கி யானைகள்
x
தினத்தந்தி 29 Oct 2018 3:00 AM IST (Updated: 29 Oct 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேவாரம் மலையடிவாரத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் கும்கி யானைகள் உலா வருவதால் அட்டகாசம் செய்த காட்டுயானை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்ததாக வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

தேவாரம், 

தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானை ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் பயிரிட்டுள்ள தென்னை, மரவள்ளிக்கிழங்கு நாசமாகின. காட்டுயானையை பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து காட்டுயானையை பிடிக்க வனத்துறையில் பயிற்சி பெற்ற கும்கி யானைகளை கொண்டு வர முடிவு செய்தனர்.

இதற்கிடையே வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டுயானையின் வழித்தடத்தை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதுமலையில் இருந்து வாசிம், விஜய் என 2 கும்கி யானைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது. அவை கம்பம் வனச்சரக அலுவலகத்தின் பின்பகுதியில் இருந்தன. நேற்று முன்தினம் கும்கி யானைகள் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பொன்குன்றம் அருகே வனப்பகுதியில் தங்க வைக்கப்பட்டது. பகல் நேரத்தில் வனப்பகுதியில் எள்ளுபாறை, சாக்குலூத்து என்னுமிடங்களில் அந்த கும்கி யானைகளை அழைத்து சென்று உலா விட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கும்கி யானைகள் வந்ததை அறிந்து கடந்த சில தினங்களாக காட்டுயானை விளைநிலங்களுக்குள் வராமல் மீண்டும் அடர்ந்த வன பகுதிக்குள் சென்று விட்டது. இந்த முறையாவது காட்டுயானையை கண்டிப்பாக பிடிக்கவேண்டும் என்று தீவிர முயற்சி ஈடுபட்டுள்ளோம். இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்குள் சென்று யானைபோல் குரல் எழுப்புவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றனர். 

Next Story