கீர்த்தி கவுடாவை முதல் மனைவி தாக்கும் வீடியோ வெளியான விவகாரம்: நடிகர் துனியா விஜயின் 2 மகள்களிடம் போலீஸ் விசாரணை


கீர்த்தி கவுடாவை முதல் மனைவி தாக்கும் வீடியோ வெளியான விவகாரம்: நடிகர் துனியா விஜயின் 2 மகள்களிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 29 Oct 2018 3:45 AM IST (Updated: 29 Oct 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

கீர்த்தி கவுடாவை முதல் மனைவி நாகரத்னா தாக்கும் வீடியோ வெளியான விவகாரத்தில் நடிகர் துனியா விஜயின் 2 மகள்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு, 

கீர்த்தி கவுடாவை முதல் மனைவி நாகரத்னா தாக்கும் வீடியோ வெளியான விவகாரத்தில் நடிகர் துனியா விஜயின் 2 மகள்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாக்குதல்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் துனியா விஜய். இவருடைய முதல் மனைவி நாகரத்னா. 2-வது மனைவி கீர்த்தி கவுடா. துனியா விஜய், பெங்களூரு கிரிநகரில் உள்ள வீட்டில் 2-வது மனைவி கீர்த்தி கவுடாவுடன் வசித்து வருகிறார். முதல் மனைவி நாகரத்னா கத்ரிகுப்பேயில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். துனியா விஜய்-நாகரத்னாவின் தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

கடந்த மாதம் (செப்டம்பர்) உடற்பயிற்சியாளர் மாருதி கவுடாவை கடத்தி தாக்கியதாக ஐகிரவுண்டு போலீசார் நடிகர் துனியா விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வேளையில், நடிகர் துனியா விஜயின் கைது நடவடிக்கைக்கு கீர்த்தி கவுடா தான் காரணம் எனக்கூறி கடந்த மாதம் 24-ந் தேதி கிரிநகரில் உள்ள துனியா விஜயின் வீட்டுக்கு சென்ற நாகரத்னா, அங்கு இருந்த கீர்த்தி கவுடாவை சரமாரியாக தாக்கினார்.

வீடியோ வெளியானது

இதுதொடர்பாக நாகரத்னா மீது கீர்த்தி கவுடா, கிரிநகர் போலீசில் புகார் செய்தார். இதேபோல், கீர்த்தி கவுடா தன்னை தாக்கியதாக நாகரத்னாவும் கிரிநகர் போலீசில் புகார் செய்தார். இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கீர்த்தி கவுடாவின் வீட்டுக்குள் நுழைந்து நாகரத்னா, அவரை தாக்கும் வீடியோ நேற்று முன்தினம் இரவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் நாகரத்னாவிடம் விசாரணை நடத்த கிரிநகர் போலீசார் முடிவு செய்து கத்ரிகுப்பேயில் உள்ள அவருடைய வீட்டுக்கு சென்றனர். அப்போது, வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. இருப்பினும், நாகரத்னா மற்றும் அவருடைய மகள்கள் மோனிகா, மோனிஷா ஆகியோர் வீட்டின் உள்ளே இருப்பதாக போலீசார் கருதினர். இதனால் கதவை திறக்கும்படி போலீசார் வலியுறுத்தினர். ஆனால், கதவை யாரும் திறக்கவில்லை.

இந்த வேளையில், மோனிஷா ஜன்னல் கதவை திறந்து போலீசாரிடம் பேசினார். அப்போது, ‘வாரண்டு இருந்தால் மட்டும் கதவு திறக்கப்படும்‘ என்று கூறினார். அத்துடன் தனது தாய் நாகரத்னா வீட்டில் இல்லை என்றும் கூறினார். இதை கேட்ட போலீசார் கதவை திறக்கும்படி அவரிடம் கேட்டனர். ஆனால், அவர் கதவை திறக்க மறுத்துவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணை

இதற்கிடையே நாகரத்னாவின் வக்கீல் மீரா, வீட்டுக்கு சென்று துனியா விஜய்-நாகரத்னா தம்பதியின் மகள்களான மோனிகா, மோனிஷா ஆகியோரை அழைத்து கொண்டு கிரிநகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள் சென்று போலீசார் பார்த்தனர். அங்கு நாகரத்னா இல்லாததும், அவர் தலைமறைவானதும் தெரியவந்தது. இதற்கிடையே, மகள்களை வக்கீல் மீரா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்வதை அறிந்த நடிகர் துனியா விஜய் தனது 2-வது மனைவி கீர்த்தி கவுடா மற்றும் குடும்பத்தினருடன் கிரிநகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.

அப்போது, நடிகர் துனியா விஜய், ‘நாகரத்னா செய்யும் தவறுக்காக என் மகள்கள் பாதிக்கப்படக்கூடாது. இவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம்‘ என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று கொண்ட போலீசார் துனியா விஜயின் மகள்கள் 2 பேரிடமும் நாகரத்னா, கீர்த்தி கவுடாவை தாக்குவது தொடர்பான வீடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள நாகரத்னாவை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Next Story