இடைத்தேர்தல் முடிந்த பின்பு கர்நாடக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் எடியூரப்பா ஆரூடம்
இடைத்தேர்தல் முடிந்த பின்பு கர்நாடக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
இடைத்தேர்தல் முடிந்த பின்பு கர்நாடக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் காலியாக உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் எடியூரப்பா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் பல்லாரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சாந்தாவை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார்.
பின்னர் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சிப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருவது குறித்து எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்
கர்நாடகத்தில் நடைபெறும் 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. இதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற சாத்தியமில்லை. இடைத்தேர்தல் முடிந்த பின்பு கூட்டணி ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளிடையே விரிசல் ஏற்படுவது உறுதி. கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளால் மோதிக் கொள்வார்கள்.
இந்த மோதலால் கூட்டணி ஆட்சி தானாக கவிழ்ந்து விடும். இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் நவம்பர் 6-ந் தேதிக்கு பின்பு கர்நாடக அரசியலில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். அதை பொறுத்து இருந்து பாருங்கள். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக மக்களிடையே தவறான தகவல்களை கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பரப்பி வருகிறார்கள். பல்லாரி தொகுதியில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் சாந்தா வெற்றி பெறுவார்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story