ஜனதாதளம்(எஸ்) குடும்ப கட்சி என்று விமர்சிக்கும் எடியூரப்பா, தனது மகனை சிவமொக்கா தொகுதியில் நிறுத்தியது ஏன்?
ஜனதாதளம்(எஸ்) கட்சி ஒரு குடும்ப கட்சி என்று விமர்சித்து வரும் எடியூரப்பா, இடைத்தேர்தலில் தனது மகனை சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தியது ஏன்? என்று மந்திரி எச்.டி.ரேவண்ணா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு,
ஜனதாதளம்(எஸ்) கட்சி ஒரு குடும்ப கட்சி என்று விமர்சித்து வரும் எடியூரப்பா, இடைத்தேர்தலில் தனது மகனை சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தியது ஏன்? என்று மந்திரி எச்.டி.ரேவண்ணா கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்லாரியில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பாவுக்கு ஆதரவாக மந்திரி எச்.டி.ரேவண்ணா பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மகனை நிறுத்தியது ஏன்?
காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கூட்டணி ஆட்சி இன்னும் செயல்பட தொடங்கவில்லை என்று பா.ஜனதாவினர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இந்த கூட்டணி ஆட்சியில் தான் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது நடக்காத வளர்ச்சி பணிகள் தற்போது கூட்டணி ஆட்சியில் நடந்து வருகிறது.
ஜனதாதளம்(எஸ்) ஒரு குடும்ப கட்சி என்றும், அப்பா, மகன்களின் கட்சி என்றும் எடியூரப்பா அடிக்கடி விமர்சித்து வருகிறார். பா.ஜனதா மட்டும் குடும்ப கட்சி இல்லையா?. ஜனதாதளம்(எஸ்) கட்சி மீது குறை கூறி வரும் எடியூரப்பா இடைத்தேர்தலில் தனது மகன் ராகவேந்திராவை சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது ஏன்?. பல்லாரி தொகுதியில் ஸ்ரீராமுலுவின் சகோதரி சாந்தாவுக்கு சீட் கொடுத்தது ஏன்? என்பது பற்றி எடியூரப்பா தெரிவிக்க வேண்டும்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து...
எனது மகன் பிரஜ்வல் அரசியலில் ஈடுபட்டு வருகிறான். ஆனால் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. அவன் தீவிர அரசியலில் ஈடுபடுவது உறுதி. அதனை தடுக்க யாராலும் முடியாது. நாங்கள் பின்வாசல் வழியாக அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை. பிரஜ்வல் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேவேகவுடாவும், குமாரசாமியும் ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பார்கள். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனால் கட்சியை வளர்க்கும் பணியில் பிரஜ்வல் ஈடுபடுவார்.
கூட்டணி கட்சி தலைவர்கள் எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பாவை ஆதரித்து நான் பிரசாரம் செய்துள்ளேன். அதுபோல, காங்கிரஸ் தலைவர்களும் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்கள்.
இவ்வாறு மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறினார்.
Related Tags :
Next Story