மின்மோட்டார் வாங்க விவசாயிகளுக்கு மானியம்; கலெக்டர் தகவல்
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு மின்மோட்டார் வாங்க மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ‘ஒரு துளி நீரில் அதிக பயிர்’ எனும் தலைப்பில், மானாவாரி நிலங்களில் நீர் சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கிடைக்கிற நீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தி விளைச்சலை பெருக்குவதே இதன் நோக்கம் ஆகும்.
இந்த திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2018-19-ம் ஆண்டுக்கு ரூ.13 லட்சம் மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டீசல் பம்பு அல்லது மின் மோட்டார் (5 எச்.பி. திறன்) வாங்க அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மானியமும், தரைநிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரமும், பாசன குழாய்கள் பதிக்க ரூ.10 ஆயிரமும் மானியமாக வழங்கப்படும்.
மேற்கண்ட மானியங்களை பெறுவதற்கு சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்தூவான் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கட்டாயம் அமைத்திருக்க வேண்டும். எனவே தகுதியுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதார் அட்டை, 2 புகைப்படம், வங்கிக்கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தினை திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் திட்ட அலுவலர் அலுவலகம் அல்லது தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம் ஆகியவற்றில் அளித்து முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.
தகுதியான விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அலுவலர்கள் ஆய்வு செய்து மானியம் வழங்குவார்கள். மானியத்தொகைகள் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story