தஞ்சை பெரியகோவிலில் கீறல் விழுந்த மணி மாற்றப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு


தஞ்சை பெரியகோவிலில் கீறல் விழுந்த மணி மாற்றப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 29 Oct 2018 4:15 AM IST (Updated: 29 Oct 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரியகோவிலில் நடைசாத்துவதற்கு முன்பாக அடிக்கப்படும் மணி கீறல் விழுந்த நிலையில் உள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து விட்டது. தற்போது தஞ்சை பெரியகோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தஞ்சை பெரியகோவிலில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும். மதியம் 12.30 மணிக்கு நடை சாத்தப்படும். இதே போல் மாலையில் மீண்டும் 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடைசாத்துவது வழக்கம். நடை சாத்தப்படுவதற்கு முன்பு பெரியகோவிலில் தொங்கவிடப்பட்டுள்ள மணி அடிக்கப்படுவது வழக்கம்.

இதனை பக்தர்கள் அறிந்து கொண்டு சாமி கும்பிட செல்பவர்கள் சீக்கிரமாக சென்று சாமி கும்பிடுவர். சாமி தரிசனம் செய்தவர்கள் உடனடியாக வெளியே வருவார்கள்.

இதற்காக பெருவுடையாருக்கு செல்லும் வாயிலின் அருகே உள்ள தூண் அருகில் சங்கிலியால் இந்த மணி தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த மணி தற்போது கீறல் விழுந்து காணப்படுகிறது. பொதுவாக கீறல் விழுந்த கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை வீடுகளில் வைக்கக்கூடாது என்பார்கள். அது போல கீறல் விழுந்த மணி கோவிலில் இருப்பதை பக்தர்களும் அபசகுணமாக பார்க்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த மணி கீறல் விழுந்த நிலையில் உள்ளது. இதனால் மணி அடிக்கும் போது சத்தம் கோவிலுக்குள் எதிரொலிப்பதை போல கேட்கிறது. எனவே கீறல் விழுந்த இந்த மணியை உடனடியாக மாற்றி விட்டு புதிதாக மணி வாங்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story