ஐகோர்ட்டு வளாகத்தில் காதலியை கொன்ற வழக்கில் வக்கீலுக்கு ஆயுள் தண்டனை பெங்களூரு கோர்ட்டு உத்தரவு


ஐகோர்ட்டு வளாகத்தில் காதலியை கொன்ற வழக்கில் வக்கீலுக்கு ஆயுள் தண்டனை பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Oct 2018 3:30 AM IST (Updated: 29 Oct 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக ஐகோர்ட்டு வளாகத்தில் வைத்து காதலியை கொன்ற வழக்கில் வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக ஐகோர்ட்டு வளாகத்தில் வைத்து காதலியை கொன்ற வழக்கில் வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

காதலி கொலை

கோலார் மாவட்டம் சீகலபயாவில் வசித்து வருபவர் ராஜப்பா (வயது 34). வக்கீல். இவர், பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் பயிற்சி வக்கீலாக இருந்தார். அப்போது, தன்னுடன் வக்கீலாக பயிற்சி பெற்று வந்த நவீனா (25) என்பவரும், ராஜப்பாவும் காதலித்தனர். இந்த வேளையில், நவீனாவுக்கு இன்னொருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக, அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி ஐகோர்ட்டுக்கு சென்ற ராஜப்பா, வளாகத்தில் வைத்து நவீனாவை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் படுகொலை செய்தார். பின்னர், அவர் கழிவறைக்கு சென்று விஷம் குடித்தும், தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டும் தற்கொலைக்கு முயன்றார்.

ஆயுள் தண்டனை

இதுபற்றி அறிந்தவுடன் விதானசவுதா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜப்பாவை கைது செய்தனர். அவரை ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். கொலையான நவீனாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் நலம் தேறிய நிலையில் ராஜப்பா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட ராஜப்பாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story