தீபாவளி பண்டிகைக்காக 1-ந்தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தல்
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓய்வூதியம் 1-ந்தேதியே வழங்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர்,அக்.29-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குடந்தை, நாகை மண்டலங்களில் செயல்படும் ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் தஞ்சை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அப்பாத்துரை கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சென்னையில் நடந்த போக்குவரத்து சங்க பிரதிநிதிகளுடான பேச்சுவார்த்தையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2018-ம் ஆண்டு மார்ச் வரை பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, பென்சன் ஒப்படைப்பு, விடுப்பு உள்ளிட்ட ஓய்வுகால பணப்பலன்களை முழுமையாக வழங்கிட ரூ.251 கோடியே 2 லட்சம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது.
தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 75 ஆயிரம் பேர் உள்ளனர். ஓய்வூதியம் மாதந்தோறும் 8-ந்தேதி அல்லது 10-ந்தேதி வழங்கப்படுகிறது. தற்பொழுது நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே தீபாவளி பண்டிகை வருகிறது. எனவே 75 ஆயிரம் ஓய்வூதியர்களின் குடும்ப உறுப்பினர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட நவம்பர் மாதம் முதல் தேதியிலேயே ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கு கோரிக்கை கடிதம் அனுப்புவது. ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வூதியர் சங்க 2-வதுஆண்டு பேரவை கூட்டத்தை அடுத்தமாதம் (நவம்பர்) 18-ந்தேதி தஞ்சையில் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பொருளாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் ராகவன், தியாகராஜன், கோவிந்தராஜ், குடந்தை அரசு போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. பொது செயலாளர் மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story