நாசிக்கில் குடிசை பகுதியில் தீ விபத்து 100 வீடுகள் எரிந்து நாசம்


நாசிக்கில் குடிசை பகுதியில் தீ விபத்து 100 வீடுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 29 Oct 2018 5:15 AM IST (Updated: 29 Oct 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

நாசிக்கில் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின.

நாசிக், 

நாசிக்கில் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின.

திடீர் தீ விபத்து

நாசிக், மாலேகாவ் நகர் பகுதியில் சாக்சாப் குடிசை பகுதி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலையில் இங்குள்ள ஒரு குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. வேகமாக பரவிய தீ மளமளவென அடுத்தடுத்து உள்ள வீடுகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடிசை பகுதியை சேர்ந்த மக்கள் அலறியபடி வீட்டை விட்டு வெளியேறினர். மேலும் பலர் தங்கள் வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் முக்கிய பொருட்களை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து மாலேகாவ், சதானா, மன்மத் மற்றும் துலே உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடிசைவாசிகளும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.

உயிர் இழப்பு இல்லை

இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. மேலும் அங்கிருந்த சில வீடுகளில் இருந்த 8 கியாஸ் சிலிண்டர்கள் நெருப்பில் எரிந்து வெடித்து சிதறியதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை. இருப்பினும் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை. எனினும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பலர் தங்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதியை மாலேகாவ் மாநகராட்சி மேயர் ரஷித் சாயிக், உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் வீடுகளை இழந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

Next Story