ராமநத்தம் அருகே: கடன் பிரச்சினையால் விவசாயி சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக 5 பேர் கைது


ராமநத்தம் அருகே: கடன் பிரச்சினையால் விவசாயி சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக 5 பேர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2018 3:30 AM IST (Updated: 29 Oct 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே கடன் பிரச்சினையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநத்தம், 

ராமநத்தம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு(வயது 50), விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு(60) என்பவரிடம் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. இதற்காக சேட்டு, ரூ.60 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளார். பாக்கி ரூ.20 ஆயிரத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து இந்த பணத்தை தருமாறு சேட்டுவிடம் சாமிக்கண்ணு பலமுறை கேட்டுள்ளார். இருப்பினும் அவர் பணம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று சாமிக்கண்ணு தனது மனைவி பச்சையம்மாள்(50), மகன் பாலமுருகன்(31), உறவினர் அல்லிமுத்து(45), இவருடைய மனைவி சித்ரா(40) ஆகியோருடன் சேட்டு வீட்டுக்கு சென்று பணத்தை கேட்டுள்ளார்.

அப்போதும் சேட்டு பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாமிக்கண்ணு உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து அவரை ஆபாசமாக திட்டியுள்ளனர். மேலும் சேட்டுவுக்கு சொந்தமான பசுமாட்டையும் பிடித்துக்கொண்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சேட்டு, சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சேட்டுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சேட்டுவின் மனைவி பொன்னம்மாள் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக சாமிக்கண்ணு உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.

Next Story