கிள்ளை அருகே: விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை
கிள்ளை அருகே விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
பரங்கிப்பேட்டை,
கிள்ளை அருகே உள்ள நவாப்பேட்டை பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மகன் ரமேஷ்(வயது 32). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி(26) என்பவருக்கும் கடந்த 1 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ரமேஷ், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதியடைந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரமேஷ், சம்பவத்தன்று நவாப்பேட்டை மெயின்ரோட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார்.
இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்துலட்சுமி கிள்ளை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story