திருச்சியில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் பழுது ஏற்படுவதால் பயணிகள் அவதி


திருச்சியில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் பழுது ஏற்படுவதால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 29 Oct 2018 4:15 AM IST (Updated: 29 Oct 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் தொடர்ந்து பழுது ஏற்படுவதால் பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்ளூர் விமானங்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், துபாய், இலங்கை, மலேசியா, சவுதிஅரேபியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ள திருச்சி விமானநிலையம் தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் இருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் திருச்சி விமானநிலையத்தை தேர்ந்தெடுத்து அங்கிருந்து சென்று வருகிறார்கள்.

இதேபோல் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் பலர் விமானம் மூலம் திருச்சி விமானநிலையம் வந்து இங்கிருந்து கார் மூலமோ, பஸ் மூலமாகவோ தங்களது ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். எந்நேரமும் பரபரப்பாக இருக்கும் திருச்சி விமானநிலையத்தில் கடந்த சில நாட்களாக விமானங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பழுது காரணமாக விமானங்கள் தாமதமாவதால் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து துபாய் புறப்பட்ட விமானம் விமானநிலைய வளாகம் முன்பு இருந்த ஆன்டெனா கருவிகள் மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதி திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 130 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் 12 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டு சென்றது. இதேபோல் நேற்று முன்தினம் மாலை திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலும் கோளாறு ஏற்பட்டது.

தொடர்ச்சியாக திருச்சியில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் பழுது ஏற்படுவதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருச்சி விமானநிலையத்தில் புதிய முனையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. விமானநிலைய ஓடுதள பாதை விரிவாக்கம், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் விமான பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களை குறித்த நேரத்தில் பயணம் மேற்கொள்வதில் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் விமானநிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களையும், வெளிநாடுகளில் இருந்து திருச்சி வரும் விமானங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story