ஊட்டி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில்: பீட்ரூட் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை


ஊட்டி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில்: பீட்ரூட் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 29 Oct 2018 3:30 AM IST (Updated: 29 Oct 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் பீட்ரூட் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மஞ்சூர்,


நீலகிரி மாவட்ட விவசாயிகள் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். பெரும்பாலும் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்றவை பயிரிடப்படுகிறது. மேலும் ஏற்றுமதி செய்யப்படும் இங்கிலீஷ் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் நீர் போகம், கார் போகம், கடை போகம் என ஆண்டுக்கு 3 சீசன்களாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது கடை போக சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி கடந்த மாதம் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் காய்கறிகளை பயிரிட்டனர்.

தற்போது பீட்ரூட், முள்ளங்கி, டர்னீப் உள்ளிட்ட காய்கறிகள் அறுவடைக்கு தயாராகி உள்ளன. அவற்றை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நீலகிரியில் தற்போது பீட்ரூட் சாகுபடி அதிகரித்து உள்ளது. இதனால் பீட்ரூட் பயிரிட்ட விவசாயிகள் தங்களது தோட்டத்தில் அறுவடை செய்த பீட்ரூட்களை தரம் பிரித்து ஊட்டி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். ஆனால் கிலோவுக்கு ரூ.6 முதல் ரூ.8 வரை மட்டுமே கொள்முதல் விலை கிடைக்கிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பிக்கட்டி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

ஒரு கிலோ பீட்ரூட் உற்பத்திக்கு ரூ.7 முதல் ரூ.8 வரை செலவாகிறது. ஆனால் மார்க்கெட்டில் கொள்முதல் விலை ரூ.6 முதல் ரூ.8 வரை தான் கிடைக்கிறது. இதனை வைத்து எந்தவித தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிவதில்லை. குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.20 கிடைத்தால் மட்டுமே தேவைகளை சமாளிக்க முடியும். விலை வீழ்ச்சியால் ஒருசில விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பீட்ரூட்களை அறுவடை செய்யாமலேயே விட்டுவிட்டனர். எனவே பீட்ரூட்டுக்கு நல்ல விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story