தொழிலாளி மர்மச்சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
தொழிலாளி மர்மமான முறையில் இறந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
வால்பாறை,
வால்பாறை அருகே உள்ள சிறுகுன்றா எஸ்டேட் கீழ்பிரிவு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ்மில்லர் (வயது 52). இவர் தனியார் எஸ்டேட்டில் தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி லில்லி விக்டோரியா. கடந்த 26-ந் தேதி ஜார்ஜ்மில்லர் தனக்கு வரவேண்டிய சம்பளத்தை கேட்டு உதவி தோட்ட அதிகாரிகள் ரமேஷ்குமார், முத்துக்குமார் ஆகியோரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ஜார்ஜ்மில்லர் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் அதிகாலையில் ஜார்ஜ்மில்லருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜார்ஜ்மில்லர் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் ஜார்ஜ்மில்லரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், எஸ்டேட் அதிகாரிகள் அவரை தாக்கியதால் இறந்து உள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே ஜார்ஜ்மில்லரின் மனைவி லில்லி விக்டோரியா நேற்று மாலை வால்பாறை போலீஸ் நிலையத்தில் தனது கணவரை உதவி தோட்ட அதிகாரிகள் தாக்கியதால் தான் அவர் இறந்திருப்பார். எனவே அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமேனி, சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story