நாகர்கோவிலில் பரபரப்பு: நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்- 2 ஸ்கூட்டர்கள் தீ வைத்து எரிப்பு - மர்ம நபர்கள் கைவரிசை


நாகர்கோவிலில் பரபரப்பு: நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்- 2 ஸ்கூட்டர்கள் தீ வைத்து எரிப்பு - மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 29 Oct 2018 4:00 AM IST (Updated: 29 Oct 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நள்ளிரவில் ஒரு மோட்டார் சைக்கிளும், 2 ஸ்கூட்டர்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் செட்டிகுளம் அருகில் உள்ள சிதம்பரநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 39). இவர் டி.வி.டி. காலனி பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவருடைய பக்கத்து வீடுகளில் குமரேசன் (56), மணிகண்டன் (51) ஆகியோர் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள். குமரேசன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மணிகண்டன் லாரி டிரைவராக உள்ளார்.

பிரேம் ஆனந்த், குமரேசன் ஆகியோர் ஸ்கூட்டர் வைத்துள்ளனர். அந்த ஸ்கூட்டர்களில்தான் தினமும் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இதேபோல் மணிகண்டன் மோட்டார் சைக்கிள் வைத்துள்ளார். 3 பேரும் இரவு நேரங்களில் தங்களுடைய வீடுகளின் முன் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் இரவும் நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்தநிலையில் நள்ளிரவு ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பகுதியில் டயர் வெடித்தது போன்று சத்தம் கேட்டது. இதனால் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பிரேம் ஆனந்த் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார்.

அப்போது தன்னுடைய ஸ்கூட்டரும், அருகருகே நின்று கொண்டிருந்த குமரேசன் மற்றும் மணிகண்டன் ஆகியோருடைய ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேம் ஆனந்த் பக்கத்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த குமரேசன், மணிகண்டன் ஆகியோரையும் எழுப்பினார்.

பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் 2 ஸ்கூட்டரும், ஒரு மோட்டார் சைக்கிளும் முழுமையாக எரிந்து நாசமாகின.

இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயில் கருகி உருக்குலைந்து கிடந்த ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் நள்ளிரவில் சம்பவ இடத்துக்கு வந்த மர்ம நபர்கள், 2 ஸ்கூட்டர்கள் மீதும், மோட்டார் சைக்கிள் மீதும் கழிவு ஆயிலை ஊற்றி தீ வைத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக பிரேம் ஆனந்த் கொடுத்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த சம்பவம் முன்விரோதத்தில் நடந்ததா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story