மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு


மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு
x
தினத்தந்தி 29 Oct 2018 3:17 PM IST (Updated: 29 Oct 2018 3:17 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுத் துறைகளில் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை எஸ்.எஸ்.சி. அமைப்பு அறிவித்து உள்ளது. தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) பல்வேறு மத்திய அரசுத்துறை பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல்படுகிறது. இந்த அமைப்பு மத்திய அரசு துறைகளில் ஏற்படும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வை ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். தற்போது 2018-ம் ஆண்டுக்கான தேர்வுக்கு விண்ணப்பம் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வின் மூலம் அரசின் ‘குரூப்-பி’ மற்றும் ‘குரூப்-சி’ பிரிவுகளில் உள்ள ‘கிரேடு-சி’ மற்றும் ‘கிரேடு-டி’ ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எவ்வளவு பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

இதற்கான தேர்வை எழுத விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ‘கிரேடு-சி’ பணிக்கு 30 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். 1-1-2019-ந் தேதியை அடிப்படையாக கொண்டு வயது வரம்புகள் கணக்கிடப்படுகின்றன. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

கல்வித் தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மேல்நிலை கல்வியில் (12-ம் வகுப்பில்) அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் தட்டச்சு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். ‘கிரேடு -டி’ பணிகளுக்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும், ‘கிரேடு-சி’ பணிகளுக்கு நிமிடத்திற்கு 100 வார்த்தைகளும் சுருக்கெழுத்தில் குறிப் பெடுத்து அதை குறித்த நேரத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

எழுத்து தேர்வுக்கு உட்படுத்தி விண்ணப்பதாரர்கள் சோதிக்கப்படுவார்கள். இதில் வெற்றி பெறுபவர்கள் ஸ்டெனோகிராப் திறன் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அனைத்து தேர்வுகளிலும் பெறும் மதிப்பெண்களின் தரவரிசை பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.

கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 19-11-2018-ந் தேதியாகும். வங்கி மூலம் கட்டணம் செலுத்த கடைசிநாள் 21-11-2018-ந் தேதியாகும். இதற்கான கணினி தேர்வு 6-2-2019-ந் தேதி நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ssc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

Next Story