புளியந்தோப்பில் திறந்து கிடக்கும் மின்சார பெட்டிகளால் அபாயம்


புளியந்தோப்பில் திறந்து கிடக்கும் மின்சார பெட்டிகளால் அபாயம்
x
தினத்தந்தி 30 Oct 2018 3:45 AM IST (Updated: 29 Oct 2018 10:34 PM IST)
t-max-icont-min-icon

புளியந்தோப்பில் திறந்து கிடக்கும் மின்சார பெட்டிகளால் அபாயம் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு, பெரியார் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 438 வீடுகள் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பெரும்பாலான மின்சார பெட்டிகள் கதவு இல்லாத நிலையில் கேபிள்கள் வெளியே நீட்டியபடி உள்ளன.

இதனால் வீதிகளில் விளையாடும் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகளின் உயிரை பறிக்கும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. இந்த மின்சார பெட்டிகளை சீரமைக்கக்கோரி மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொடுங்கையூர் ராஜரத்தினம் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் திறந்த கிடந்த மின்சார பெட்டியில் இருந்து மின்சாரம் கசிந்து அங்கு வசித்து வந்த 2 சிறுமிகள் உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது என்ற வகையில் அனைத்து மின்சார பெட்டிகளையும் சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் அன்று முதல் இன்று வரை நாங்கள் எங்கள் பகுதி மின்சார பெட்டிகளை சீரமைக்கும்படி மின்வாரிய அதிகாரிகளை கேட்டு வருகிறோம். ஆனால் அவர்கள் மீண்டும் ஒரு உயிர் பலிக்கு காத்திருக்கின்றார்களா? என்று எங்களுக்கு அச்சமாக உள்ளது. அடிதட்டு மக்களின் அபயகுரல் மின்வாரிய அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவது வருத்தம் அளிக்கிறது.

Next Story