நிலத்தை அபகரிக்க முயற்சி: குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண் - திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர். அப்போது, சிறுவர், பெரியவர்கள் என மொத்தம் 25 பேர் சேர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வந்து கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் அந்த கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து அவர் மீதும், சுற்றி உள்ளவர்கள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார் ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தியதுடன் மண்எண்ணெய் கேனை பறித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்த பெரியசுப்பு மனைவி நாகம்மாள் (வயது 50) என்பது தெரியவந்தது. தீக்குளிக்க முயன்றது குறித்து போலீசாரிடம் அந்த பெண் கூறியதாவது:-
எனது கணவர் மற்றும் அவருடைய 3 சகோதரர்களும் இறந்துவிட்டனர். தற்போது 4 குடும்பத்தை சேர்ந்த 25 பேரும் அஞ்சுகுளிப்பட்டியில் உள்ள தோட்டத்தில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறோம். மேலும், அங்கேயே விவசாயம் செய்வதுடன் கூலி வேலைக்கும் சென்று வருகிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்பு, எங்களுடைய தோட்டத்தின் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம்.
இந்தநிலையில், பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சிலர் எங்களது பட்டா நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு வீடுகளை இடித்து விட்டனர். மேலும், தோட்டத்தில் உள்ள எங்களது தென்னை மரங்களை வெட்டி அகற்றுவும் முயல்கின்றனர். இதற்கு, சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரும் உடந்தையாக உள்ளார். எனவே, எங்களது வீடுகளை இடித்ததுடன், பட்டா நிலத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக, கலெக்டரிடம் மனு அளிக்குமாறு அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். அதன்பேரில், அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு சென்றனர்.
Related Tags :
Next Story