தேனியில் விதியை மீறி நடந்த கட்டுமான பணி: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம் - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்


தேனியில் விதியை மீறி நடந்த கட்டுமான பணி: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம் - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 30 Oct 2018 4:00 AM IST (Updated: 29 Oct 2018 11:06 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் விதியை மீறி நடந்த கட்டுமான பணியால் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின.

தேனி,

தேனி கடற்கரை நாடார் தெருவில் ஏராளமான வணிக வளாக கட்டிடங்கள் உள்ளன. இதில், லட்சுமணதாஸ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை ராஜஸ்தான் மாநிலம், ஜாலுர் மாவட்டத்தில் உள்ள பீன்வால் பகுதியை சேர்ந்த விக்ரம்குமார் (வயது 35) என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.

அந்த கட்டிடம் தரைத்தளம் மற்றும் 2 மாடிகள் கொண்டது. அதில் பிளாஸ்டிக் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், கவரிங் நகைகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த கட்டிடத்துக்கு அருகில் மற்றொரு அடுக்குமாடி கட்டிடம் இருந்தது. புதிய கட்டிடம் கட்டுவதற்காக அந்த அடுக்குமாடி கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

பின்னர், புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடித்தளம் அமைக்க குழி தோண்டும் பணிகள் நடந்து வந்தது. பழைய கட்டிடங்களின் கட்டுமான அடித்தளத்தை விடவும் ஆழமாக குழி தோண்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விக்ரம்குமார் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார்.

நள்ளிரவு 1.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் கடைகள் அமைந்து இருந்த அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி நாசமாகின.
கட்டிடம் இடிந்து அங்கிருந்த மின்கம்பங்கள் மீது விழுந்தது. இதில், 4 மின்கம்பங்கள் முறிந்து சேதம் அடைந்தன. விபத்து நடந்த உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், அப்பகுதிகளில் உள்ள ஏராளமான கடைகளுக்கு வழங்கப்பட்டு இருந்த மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீசார், நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மின்வாரிய பணியாளர்களும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

முறையான அனுமதி வாங்காமல் கட்டுமான பணிகள் மேற்கொண்டதால் அருகில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் ராஜாராமிடம் கேட்ட போது, ‘அந்த கட்டிடம் கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை. இதனால், நோட்டீஸ் வழங்கப்பட்டு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

அதேநேரத்தில், பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டு இருந்த போதிலும் நேற்று முன்தினம் வரை பணிகள் நடந்து கொண்டு இருந்ததாக அப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள் தெரிவித்தனர். கட்டிடம் இடிந்து விழுந்து இடிபாடுகள் அப்புறப்படுத்தப்படாமல் கிடக்கிறது. இதனால், அந்த வழியாக பிற கடைகளுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாக கடை திறந்து இருக்கும் போது ஆட்கள் அதிக அளவில் கடைக்குள் இருப்பார்கள். கடை திறந்து இருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டு இருந்தால் பெரும் அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும். கடையில் வழக்கமாக பணியாளர்கள் 2 பேர் தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் பணியாளர்கள் கடையில் யாரும் தங்கவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story