அடுத்தமாதம் 12-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு, முருகன் வேடம் அணிந்து வந்து இந்து மக்கள் கட்சியினர் மனு


அடுத்தமாதம் 12-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு, முருகன் வேடம் அணிந்து வந்து இந்து மக்கள் கட்சியினர் மனு
x
தினத்தந்தி 30 Oct 2018 4:30 AM IST (Updated: 29 Oct 2018 11:19 PM IST)
t-max-icont-min-icon

அடுத்தமாதம் 12-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு முருகன் வேடம் அணிந்து வந்து இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.

நாகப்பட்டினம்,
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் சாமிநாதன் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் ஆறு.பார்த்திபன் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர். பின்னர் இந்து மக்கள் கட்சியினர் முருகன் வேடம் அணிந்து காவடி எடுத்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். ஆண்டுதோறும் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின் போது சிக்கலில் உள்ள வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து முருகன் வேல் வாங்கி சென்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து முருகன் வேல் வாங்கி செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சிக்கலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் அம்மனிடம் முருகபெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளிலும் பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story