பெங்களூருவில் தொழில்அதிபர் வீட்டில் திருடிய வேலைக்காரன் கைது


பெங்களூருவில் தொழில்அதிபர் வீட்டில் திருடிய வேலைக்காரன் கைது
x
தினத்தந்தி 30 Oct 2018 4:30 AM IST (Updated: 30 Oct 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், தொழில்அதிபர் வீட்டில் திருடிய வேலைக்காரனை போலீசார் கைது செய்ததோடு, பீகாரில் உள்ள அவனுடைய வீட்டு அருகே குழியில் புதைத்து வைத்த ரூ.80 லட்சம் மதிப்பிலான வைரம்-தங்கம் மற்றும் பொருட்களை போலீசார் மீட்டனர்.

பெங்களூரு,

பெங்களூரு மடிவாளா அருகே வசித்து வருபவர் சத்யபிரகாஷ். இவருடைய வீட்டில் பீகார் மாநிலம் மதுபனி மாவட்டம் பிப்ராகமல்புரா கிராமத்தை சேர்ந்த அகிலேஷ் குமார் (வயது 21) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 17-ந் தேதி சத்யபிரகாஷ் வீட்டில் இல்லை. இந்த வேளையில், அகிலேஷ் குமார் வீட்டின் முதல் மாடிக்கு சென்று அங்கு இருந்த அலமாரியை உடைத்து வைர நகைகள், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், கைக்கெடிகாரங்கள் அடங்கிய பெட்டியை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

இந்த நிலையில், வீடு திரும்பிய சத்யபிரகாஷ் தனது வீட்டில் இருந்த நகைப்பெட்டி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அகிலேஷ் குமாரை அழைத்து விசாரிக்க முயற்சித்த போது அவரும் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் நகைப்பெட்டியை அகிலேஷ் குமார் திருடி இருக்கலாம் என்று அவர் சந்தேகித்தார். இதுதொடர்பாக, மடிவாளா போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரில், 2 கிலோ தங்கம்-வைர நகைகள், 500 கிராம் வெள்ளி பொருட்கள், கைக்கெடிகாரங்கள் என்று மொத்தம் ரூ.80 லட்சம் பொருட்கள் திருட்டு போனதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது, நகைகளை திருடி கொண்டு அகிலேஷ் குமார் பீகாருக்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்ய பீகாருக்கு சென்றனர்.

இந்த வேளையில், அகிலேஷ் குமார் தனது வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்குள்ள போலீசாரின் உதவியுடன் தனிப்படை போலீசார் அகிலேஷ் குமாரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், சத்யபிரகாசின் வீட்டில் திருட்டில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, நகைகள் பற்றி போலீசார் கேட்டனர். அதற்கு அவர் தனது வீட்டு அருகே குழி தோண்டி அதில் நகைகளை புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் குழியில் புதைத்து வைக்கப்பட்ட வைர நகைகள், தங்க நகைகள் உள்பட அனைத்து பொருட்களையும் போலீசார் மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட தகவலை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். முன்னதாக, கைதான அகிலேஷ் குமாரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை அவர் பார்வையிட்டார். அவருடன் உயர் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story