தனியார் தொழிற்சாலையை கிராம மக்கள் முற்றுகை
தனியார் தொழிற்சாலையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
வெள்ளியணை,
கரூரை அடுத்துள்ள காக்காவாடி ஊராட்சி குள்ளம்பட்டி அருகே கரூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ ரங்கா பாலிமர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட பழைய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், பாலித்தீன் பைகள் ஆகியவற்றை விலைக்கு வாங்கி வந்து அவற்றை அரைத்து ரேயான் எனப்படும் நூல் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு ரேயான் நூல் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்களின் கழிவுகள் தொழிற்சாலை வளாகத்தில் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு கொட்டப்படும் இந்த கழிவுகள் மழைநீருடன் கலந்து பூமியில் இறங்கி அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு பரவி அந்நிலத்தின் தன்மையை மாற்றுவதாகவும், நிலத்தடி நீருடன் கலந்து குடிநீரில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இக்கழிவுகள் அந்த பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன் சுற்றுச்சூழல் மாசடைந்து அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே இத்தொழிற்சாலையை இந்த பகுதியில் இயக்கக்கூடாது என பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் புகார் மனுக்கள் இப்பகுதி பொதுமக்கள் சார்பில் அனுப்பப்பட் டன.
ஆனால் இதுவரை இத்தொழிற்சாலை மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த காக்காவாடி, அப்பிபாளையம், தாளப்பட்டி ஊராட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் நேற்று காலை தொழிற்சாலை முன்பு ஒன்று திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கரூர் தாசில்தார் ஈஸ்வரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், வெள்ளியணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமதுஜாபர் மற்றும் போலீசார் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் தொழிற்சாலை நிர்வாகத்தினரை உரிய முறையில் சுத்திகரிப்பு அமைப்பை நிறுவி கழிவுகளை சுத்திகரிக்கவும், அதுவரை தொழிற்சாலை செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டனர். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் பரபரப்பு நிலவி யது.
Related Tags :
Next Story