கோவண்டி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தாய், மகன் லாரி சக்கரத்தில் சிக்கி சாவு
கோவண்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தாய், மகன் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை,
மும்பை காஞ்சூர்மார்க் பகுதியை சேர்ந்தவர் பிரமோத். இவர் மனைவி பூஜா (வயது29), 11 மாதமான மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் கோவண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார்.
அப்போது சாலையில் கிடந்த பள்ளத்தில் இவரது மோட்டார் சைக்கிள் இறங்கியதாக தெரிகிறது. இதனால் பின்னால் அமர்ந்திருந்த பூஜா நிலை தடுமாறி தனது மகனுடன் சாலையில் கீழே விழுந்தார். அப்போது பின்னால் குப்பை ஏற்றி வந்த மாநகராட்சி லாரி, சாலையில் விழுந்து கிடந்த தாய், மகன் மீது ஏறி சென்றது.
இதில் தாய், மகன் இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். விபத்து நடந்த உடனே லாரியை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது பற்றி தகவல் அறிந்த தேவ்னார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் தாய், மகன் இருவரும் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற லாரி டிரைவர் ரகமத் அலி ஷாவை அன்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story