வேளாங்கண்ணி அருகே குளக்கரையில், குழந்தையின் எலும்புக்கூடு நரபலி கொடுக்கப்பட்டதா? போலீசார் விசாரணை
வேளாங்கண்ணி அருகே குளக்கரையில் குழந்தையின் எலும்புக்கூடு கிடந்தது. இதனை கைப்பற்றிய போலீசார், அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வழியாக கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இப் பகுதியில் உள்ள வீரப்பசாமி கோவில் அருகே குளக்கரையில் நேற்று குழந்தையின் எலும்புக்கூடு சிதறிய நிலையில் கிடந்தது. அதன் அருகே சாம்பலும் கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், உடனடியாக இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் அங்கு சென்று எலும்புக்கூட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது எலும்புக்கூடு தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
சிதறிய நிலையில் இருந்த அந்த எலும்புக்கூட்டை போலீசார் கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளக்கரைக்கு எலும்புக்கூட்டை கொண்டு வந்தது யார்? நர பலிக்காக குழந்தையை எரித்துக்கொன்றார்களா? அல்லது கள்ளக்காதலில் பிறந்த குழந்தை எரித்துக்கொலை செய்யப்பட்டதா? என்பது பற்றி வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளக்கரையில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story