உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2018 3:00 AM IST (Updated: 30 Oct 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்மபுரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்பாரப்பட்டி,


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிரைசாமேரி, ஒன்றிய செயலாளர்கள் கந்தசாமி, குப்புசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் முரளி, ஜெயா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். தர்மபுரி நகராட்சியில் வரலாறு காணாத வரி உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வரி உயர்வை குறைக்க வேண்டும். சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை தடுப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரக்குழு பொறுப்பாளர்கள் சங்கர், மார்க்ஸ், மணிகண்டன், வேலவன் ரெங்கநாயகி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சொத்துவரி உயர்வை கண்டித்தும், உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரியும் பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். நிர்வாகி தர்மராஜன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார்.

இதில் நிர்வாகிகள் பெருமாள், சக்திவேல், லோகு, சிலம்பு, முகிலன் கிளை செயலாளர்கள் ராஜசேகர், கார்த்திக் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, குடிநீர் கட்டணம், சொத்து வரி, பிறப்பு இறப்பு சான்றுகள் ஆகியவற்றின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நாகராஜ் நன்றி கூறினார்.

Next Story