கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா : 8 பேர் கைது
ஊட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி,
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் கடைகள், அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகளுக்கு 100 சதவீத வரி உயர்வும், வீடுகளுக்கான சொத்து வரி 50 சதவீதமும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதை கண்டித்தும், வரியை குறைக்க கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை 10.30 மணிக்கு வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கலெக்டரிடம் மனு அளிக்க 4 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பத்ரி உள்ளிட்ட 8 பேர் கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் போலீசார் அனுமதி வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும், கம்யூனிஸ்டு கட்சியினரை அவமரியாதை செய்வதாக கூறியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சங்கரலிங்கம் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து ஊட்டி சிறுவர் மன்றத்தில் தங்க வைத்தனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கூறிய தாவது:-
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் நேரில் சென்று மனு அளிக்க முயன்றோம். ஆனால் போலீசார் 4 பேருக்கு மேல் வேறு யாரையும் அனுமதிக்க முடியாது என கூறினர். அப்போது நாங்கள் மனு அளித்து விட்டு வந்து விடுகிறோம் என கூறியும் அதை போலீசார் ஏற்று கொள்ளவில்லை.
இதனை கண்டித்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தர்ணா போராட்டம் நடத்தினோம். இதனால் 8 பேரை கைது செய்துள்ளனர். மனு அளிக்க அனுமதிக்கவில்லையெனில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story