சமூக ஆர்வலர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: வால்பாறை தொழில் அதிபர் உள்பட 2 பேர் கைது
சமூக ஆர்வலர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக வால்பாறை தொழில் அதிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வனராஜ் (வயது 58), சமூக ஆர்வலர். இவர் கடந்த மார்ச் மாதம் உடலில் வெட்டுக்காயங்களுடன் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் பிணமாக மிதந்தார். இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.
அதில், வால்பாறையில் பாத்திர கடை நடத்தி வரும் முருகன் (41), அன்பு செல்வன் (23), குலோத்குமார் (25) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அன்புசெல்வனுக்கு வால்பாறை நகராட்சியில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக வனராஜ் ரூ.10 ஆயிரம் வாங்கிவிட்டு, வேலை வாங்கிக்கொடுக்காமலும், அந்த பணத்தை திருப்பி கொடுக்காமலும் இருந்துள்ளார். எனவே அவர்கள் 3 பேரும் சேர்ந்து அவரை ஆழியாறு வனப்பகுதியில் கொலை செய்து, உடலை காண்டூர் கால்வாயில் வீசியதும் தெரியவந்தது.
இதையடுத்து தளி போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இதற்கிடையில் கொலை நடந்த பகுதி ஆழியாறு போலீஸ் நிலைய எல்லை என்பதால் கடந்த ஜூலை மாதம் தளி போலீஸ் நிலையத்தில் இருந்து ஆழியாறு போலீசுக்கு இந்த கொலை வழக்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கில் ரூ.10 ஆயிரத்திற்கு கொலை நடந்து இருக்க வாய்ப்பில்லை எனவும், வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்று ஆழியாறு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வால்பாறை துணை சூப்பிரண்டு சுப்பிரமணியம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ் கண்ணா, போலீசார் மணி, உதயன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள். மேலும் சமூக ஆர்வலர் வனராஜ் செல்போன் எண்ணை ஆய்வு செய்து யார்? யார் பேசி உள்ளனர் என்ற விவரத்தையும் சேகரித்தனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே கைதான முருகனின் டிரைவரான ஞானசங்கரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
வால்பாறையை சேர்ந்தவர் தொழில் அதிபர் வடிவேல். இவர் நகை அடகு கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றார். மேலும் சொகுசு விடுதி வைத்து உள்ளார். இந்த நிலையில் சமூக ஆர்வலர் வனராஜ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வடிவேலின் சொகுசு விடுதி குறித்த தகவல்களை திரட்டினார். அதில் சொகுசு விடுதி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் இதுதொடர்பாக நகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளார். நகராட்சி அதிகாரிகளும் கட்டிடத்திற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வடிவேல் அதிக வட்டிக்கு பணம் கொடுப்பதாகவும் பொதுமக்களிடம் வனராஜ் கூறி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வடிவேல், வனராஜை உயிரோடு விட்டால் தொழில் நடத்த முடியாது. எனவே அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
அதன்படி அவரது நண்பரான பாத்திர வியாபாரி முருகன் மற்றும் அன்புசெல்வன், குலோத்குமார் ஆகியோர் உதவியுடன் வனராஜை கொலை செய்து காண்டூர் கால்வாயில் வீசியதும், கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு உடல் சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து வால்பாறைக்கு சென்று தொழிலதிபர் வடிவேலை தனிப்படை போலீசார் ஆழியாறுக்கு அழைத்து வந்தனர். பின்னர் வடிவேல், ஞானசங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த முருகன் தலைமறைவாக உள்ளார். அவரை பிடித்து விசாரித்தால் தான் கொலை செய்ய எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story