கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 565 பேர் கைது
கோவை கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 565 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
சத்துணவு ஊழியர்கள், வரையறுக்கப்பட்ட சம்பளம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக மாநில நிர்வாகிகள் அறிவித்தனர்.
இதன்படி நேற்று கோவை மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் நேற்று காலை கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் திரண்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
இந்த ஊர்வலத்துக்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இன்னாசி முத்து தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் பழனிசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கங்காதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 20 ஆண்கள் உள்பட 565 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டம் குறித்து மாவட்ட தலைவர் இன்னாசி முத்து கூறியதாவது:-
வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த 25,26,27 ஆகிய தேதிகளில் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு தூங்கினோம். 3 நாட்கள் போராட்டம் நடத்திய போதிலும் அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வில்லை.
இதனைத்தொடர்ந்து இன்று (நேற்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள 1,500 சத்துணவு மையங்களில் பணிபுரியும் 3,200 ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு வழங்குவது பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து உடனடியாக பேச வேண்டும். சத்தணவு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, சத்துணவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மாற்று ஏற்பாடுகள் செய்யும்படி சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து உள்ளோம். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
Related Tags :
Next Story