கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 250 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றுவதாக ஏற்றுக்கொண்ட வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம், பணிக்கொடை, உணவு செலவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த 25-ந்தேதி காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று தமிழ்நாடு முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பின்படி நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் கூடி நின்றனர். திருச்சி நகரின் பல பகுதிகளிலும் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதிகளிலும் உள்ள சத்துணவு கூடங்களை மூடிவிட்டு அவற்றில் பணியாற்றும் அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயலாளர் பெரியசாமி பேசினார். இதனை தொடர்ந்து மாவட்ட தலைவர் எலிசபெத் ராணி தலைமையில் சாலை மறியல் செய்தனர். அப்போது 10 ஆண்கள் உள்பட 250 பேரை போலீசார் கைது செய்து அரசு பஸ்களில் ஏற்றி சென்றனர். அவர்கள் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் நேற்று திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான சத்துணவு மையங்கள் மூடப்பட்டன. மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மூடப்பட்ட சத்துணவு கூடங்களை திறந்து மாற்று பணியாளர்கள் மூலம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்தனர்.
Related Tags :
Next Story