திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம்


திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 29 Oct 2018 10:30 PM GMT (Updated: 29 Oct 2018 9:57 PM GMT)

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஊர்வலம் நடைபெற்றது.

திருப்பூர்,

அரசு ஊழியர்களுக்கு இணையாக கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் பணிக்கொடை வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் குறு மைய பணியாளர்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்.

3 ஆண்டுகள் பணி முடித்தவுடன் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் திருப்பூரில் நேற்று ஊர்வலம் நடத்தப்பட்டது.

இதற்கு மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உன்னி கிருஷ்ணன், செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், இணைச்செயலாளர் ராமன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில பொருளாளர் பாக்கியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் தென்னம்பாளையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் வரை சென்றது. ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டபடி சென்றனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story