சேலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்


சேலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2018 4:00 AM IST (Updated: 30 Oct 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம், 

அங்கன்வாடி ஊழியர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ரூ.19 ஆயிரத்து 500-ம், உதவியாளர்களுக்கு அலுவல உதவியாளர்களுக்கு இணையாக ரூ.15 ஆயிரத்து 700-ம் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு ஊழியருக்கு இணையாக கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். பணிக்கொடை வழங்க வேண்டும்.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதமாக வழங்க வேண்டும். 2015-ம் ஆண்டு முதல் பிடித்தம் செய்த ஜி.பி.எப். பணத்தை ஓய்வு பெற்றவர்களுக்கு உடனே வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உதவியாளர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான காலவரையறை 10 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டாக மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்த தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஊர்வலம் மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் ரஹமத்பீ தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சரோஜா, பொருளாளர் மனோன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் தியாகராஜன், சி.ஐ.டி.யு. உழைக்கும் பெண்கள் கன்வீனர் வைரமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

முன்னதாக சேலம் கோட்டை மைதானத்தில் திரண்டிருந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:-

2½ வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி மற்றும் மதிய உணவு, சத்துணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்துவரும் அங்கன்வாடி அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இதற்காக தான் தற்போது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்தி உள்ளோம். இதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story