தஞ்சை சட்டமன்ற தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார் மாநில பொருளாளர் பேட்டி


தஞ்சை சட்டமன்ற தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார் மாநில பொருளாளர் பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2018 4:00 AM IST (Updated: 30 Oct 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று மாநில பொருளாளர் ரெங்கசாமி கூறினார்.

தஞ்சாவூர், 

தஞ்சை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ரெங்கசாமி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவராவார். இந்த வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து ரெங்கசாமி எம்.எல்.ஏ.வின் பதவி பறிபோனது. இதனைத்தொடர்ந்து தஞ்சை தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தொகுதி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்குமாறு கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி நேற்று மாலை தஞ்சை மாநகராட்சி 19, 20, 21 ஆகிய வார்டு பகுதி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை ரெங்கசாமி கேட்டறிந்தார்.

அப்போது அவரிடம் பொதுமக்கள், மேல அலங்கம் பகுதியில் வீடுகளை அகற்றக்கூடாது. அகழிகளை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெபமாலைபுரம் குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பின்னர் ரெங்கசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது தஞ்சைக்கு எண்ணற்ற வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றி தரப்பட்டுள்ளன. தஞ்சையில் வளர்ச்சிப்பணிகள் தொடர வேண்டும். விடுபட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி தரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை சட்டமன்ற தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தஞ்சை மேல வீதியில் உள்ள மூலை அனுமார் கோவிலில் ரெங்கசாமி சாமி தரிசனம் செய்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், மாவட்ட பொருளாளர் விருத்தாச்சலம், பகுதி செயலாளர்கள் செந்தில்குமார், சண்முகசுந்தரம், மகேந்திரன், அழகுராஜா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வேலாயுதம் ஆகியோர் உடன் சென்றனர்.

Next Story