பணத்தை திருடிவிட்டதாக பொய்யான காரணத்தை கூறி மலேசியாவில் சித்ரவதைக்கு ஆளாகும் மகனை மீட்க வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலரிடம், பெண் கண்ணீர்
பணத்தை திருடிவிட்டதாக பொய்யான காரணத்தை கூறி மலேசியாவில் சித்ரவதைக்கு ஆளாகும் மகனை மீட்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலரிடம், கண்ணீர் மல்க பெண் கோரிக்கை மனு அளித்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஏனாதி கிராமம் வடக்குதெருவை சேர்ந்த மருது மனைவி இந்திரா தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் கண்ணீர் மல்க மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் வீரப்பன் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவுக்கு வேலைக்காக சென்றான். அங்கு சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறான். வேலை செய்யும் இடத்தில் அவனை கொடுமைப்படுத்தி, சிலர் மிரட்டியதால் ஊருக்கு திரும்பி வர முடிவு எடுத்தான். இதை தனது முதலாளியிடம் கூறியபோது முதலில் சரி என்றவர், 3 நாட்கள் கழித்து வரவு-செலவு கணக்கில் தவறு நடந்துள்ளதாக கூறி ஒரு அறையில் அவனை அடைத்து சித்ரவதை செய்து வருகிறார்.
எங்களை செல்போனில் தொடர்பு கொண்டு, உன் மகன் சலூனில் இருந்து பணத்தை திருடி விட்டான் என்று பொய்யான காரணத்தை சொன்னதுடன், ரூ.2 லட்சம் கொடுத்தால் தான் உன் மகனை விடுவோம் என்று மிரட்டினார். இதுவரை என் மகனை விடவே இல்லை. அவனை தாக்கியதால் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனக்கு ஏற்பட்ட அவல நிலை குறித்து பேசிய ஆடியோ எங்களுக்கு கிடைத்தது. உடனே அவனது செல்போனை தொடர்பு கொண்டோம். யாரும் எடுத்து பேசவில்லை. அவனது முதலாளியின் செல்போனை தொடர்பு கொண்டால் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனக்கு மிகவும் பயமாக உள்ளது. அவனை நம்பி தான் என் குடும்பமே உள்ளது. எனவே மலேசியாவில் கொடுமைப்படுத்தப்படும் என் மகனை மீட்டு ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story