சேதுபாவாசத்திரம் அருகே மின் ஒயரை திருடிய 2 பேர் கைது 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
சேதுபாவாசத்திரம் அருகே மின் ஒயரை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேதுபாவாசத்திரம்,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி, கழனிவாசல், கொரட்டூர், விளங்குளம், சோலைக்காடு, குருவிக்கரம்பை, ரெட்டவயல், சேதுபாவாசத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் இறால் பண்ணைகளிலும், வயல்களிலும் உள்ள மின் மோட்டார்களில் இருந்து மின் ஒயர் தொடர்ந்து திருடப்பட்டன.
இதனால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணை உரிமையாளர்கள், விவசாயிகள் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சேதுபாவாசத்திரம் அருகே விளங்குளம் கிராமத்தில் ரஞ்சித் என்பவருக்கு சொந்தமான வயலில் மின்மோட்டாரில் 3 பேர் மின் ஒயரை திருடி விட்டு தப்பி ஓடினர்.
இதைப்பார்த்த கிராம மக்கள் 3 பேரையும் பிடிக்க முயற்சி செய்தனர். இதில் 2 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட 2 பேரும் சேதுபாவாசத்திரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஊமத்தநாடு ஊராட்சி பெரியகத்திக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் முனியாண்டி (வயது19), அதே பகுதியை சேர்ந்த ரவி (48) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி, ரவி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்த 2 மோட்டார்சைக்கிள்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மோட்டார்சைக்கிள்கள் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் திருடப்பட்டவை என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீசார் முனியாண்டி, ரவி ஆகிய 2 பேரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தின்போது தப்பி ஓடிய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story