பள்ளி மாணவர்கள் நடத்திய மாதிரி கிராமசபை கூட்டம்


பள்ளி மாணவர்கள் நடத்திய மாதிரி கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 31 Oct 2018 4:00 AM IST (Updated: 31 Oct 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

பனங்குளத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய மாதிரி கிராமசபை கூட்டத்தில் கட்டிடம், கழிப்பறை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கீரமங்கலம்,

கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எழுத்தறிவுத் திட்டம் தொடக்கவிழா, பள்ளி மேம்பாட்டுத் திட்டம் வெளியீடு, மாணவர்களுக்கு புதிய வண்ண ஆடைகள் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி வனஜா தலைமை தாங்கினார். அறந்தாங்கி மாவட்ட கல்வி அதிகாரி திராவிடச்செல்வன் (பொ), திருவரங்குளம் வட்டார கல்வி அதிகாரி நடராஜன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில்மெய்யநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். விழாவில் 69 மாணவ, மாணவிகளுக்கு தாரகை இக்பால் புதிய வண்ண ஆடைகள் வழங்கினார்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்கள் சார்பில் மாதிரி கிராமசபை கூட்டம் நடந்தது. கிராம சபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் எப்போதெல்லாம் நடத்தப்படுகிறது. அதில் கொண்டு வரும் தீர்மானங்கள் சிறப்பு வாய்ந்தவைகளாக உள்ளது என்பதை மாணவர்கள் விளக்கியதுடன், ஒவ்வொரு மாணவராக எழுந்து தங்கள் பள்ளிகளின் தேவைகளை பற்றி பேசி அதை தீர்மானமாக எழுதினார்கள். பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், சுற்றுச்சுவர், கழிவறை வசதி கோருதல் போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அப்போது எழுந்த ஒரு மாணவன் கிராம சபை கூடி தீர்மானத்தை எழுதி வைத்துக் கொண்டால் எந்த பணியும் நடக்காது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் போன்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றால் தான் தீர்மானங்கள் செயல்வடிவம் பெறும் என்று கூறினார்.

உடனே கிராம சபையில் கூடியிருந்த மாணவர்கள், நமது சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். நாம் நிறைவேற்றிய தீர்மானங்களை அவர்களிடமே கோரிக்கை மனுவாக கொடுக்கலாம் என்று கூறினர். இதையடுத்து கிராமசபை தீர்மானங்களை மெய்யநாதன் எம்.எல்.ஏ.விடம் மாணவர்கள் கொடுத்தனர். மாதிரி கிராம சபைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பெற்று கொண்ட மெய்யநாதன் எம்.எல்.ஏ.பேசுகையில், “ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்காக நிதி செலவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பனங்குளம் பள்ளி மாணவர்களின் கோரிக்கையான வகுப்பறை, சுற்றுச்சுவர், கழிவறை போன்ற அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும். முதலில் ரூ. 2 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் 10 நாட்களில் தொடங்கும். வருகிற மார்ச் மாதம் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்படும். வரும் கல்வி ஆண்டில் புதிய கட்டிடத்தில் வகுப்புகள் நடக்கும்”. என்றார்.

மாணவர்களின் மாதிரி கிராம சபை தீர்மானத்திற்கு உடனடி தீர்வு கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். முடிவில் ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.

Next Story