சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல் 270 பேர் கைது


சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல் 270 பேர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2018 4:00 AM IST (Updated: 31 Oct 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 270 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஒட்டுமொத்த தொகை ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சத்துணவு ஊழியர்கள் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவகர் பஜார் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தருமாறு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த கரூர் டவுன் போலீசார், அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக சத்துணவு ஊழியர்கள் 270 பேரை கைது செய்தனர். இதில் 255 பேர் பெண்கள், 15 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களை கரூரில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story