20 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது - விழுப்புரத்தில் தொல்.திருமாவளவன் அறிவிப்பு


20 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது - விழுப்புரத்தில் தொல்.திருமாவளவன் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2018 9:45 PM GMT (Updated: 30 Oct 2018 9:23 PM GMT)

20 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது என்று விழுப்புரத்தில் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

விழுப்புரம், 


திருச்சியில் வருகிற டிசம்பர் 10-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டையொட்டி விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதசார்பற்ற சக்திகள் சிதறக்கூடாது என்பதற்காக அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, சுதாகர்ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்தியாவில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டு வருகிறது. ஊழல், மது மட்டும் பிரச்சினை இல்லை, தலித் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்திற்கு பாதுகாப்பு இருக்காது.

தமிழக முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் தளவாய்பட்டியில் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளாள். இதில் தொடர்புடைய குற்றவாளி மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டத்தின் கீழ் கூட வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இது தமிழகத்திற்கே தலைகுனிவு. இந்த சம்பவத்தில் முதல்-அமைச்சர் கூடுதல் கவனம் செலுத்தக்கோரி வருகிற 5-ந் தேதி சேலத்தில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் உலகமெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிறிசேனாவும், ராஜபக்சேவும் கைகோர்த்துள்ளனர். ரனில்விக்ரமசிங்கே பெரும்பான்மை பெற்று இருந்தாலும் இலங்கை அதிபர் தன் அதிகார வரம்பை மீறி ராஜபக்சேவை பதவி ஏற்க வைத்துள்ளார். இதை உள்நாட்டு பிரச்சினை என்று பார்க்க முடியாது. ரனில்விக்ரமசிங்கே இந்தியாவிற்கு ஆதரவாக உள்ளார் என்று சொல்லி, அவசர அவசரமாக ராஜபக்சேவை பதவி ஏற்க வைத்திருப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இருவரும் சீன அரசுக்கு ஆதரவாளர்கள் என்பது உலகறிந்த உண்மை. ராஜபக்சேவும், சிறிசேனாவும் கைகோர்த்து இருப்பது ஆபத்தானது. இந்திய அரசு இந்த பிரச்சினையை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்தாலும் அந்த 18 தொகுதிகளிலும் மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளிலும் இடைத்தேர்தலை உடனே நடத்த தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும். 20 தொகுதி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது. தி.மு.க. எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்போம். நாடாளுமன்ற தேர்தலுக்காக 3-வது அணி உருவானால் தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ராகுல்காந்தியை பிரதமராக்குவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எவ்வித தயக்கமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் பாவரசு, மாவட்ட செயலாளர்கள் ஆற்றலரசு, சேரன், பாமரன், தமிழ்மாறன், மாவட்ட பொருளாளர்கள் இளங்கோவன், அறிவுக்கரசு, திலீபன், ராமமூர்த்தி, மயிலம் தொகுதி செயலாளர் செல்வசீமான், நகர செயலாளர்கள் இரணியன், சரவணன், தொகுதி துணை செயலாளர் பெரியார், மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, மரக்காணம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் மயிலாவளவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story