10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 420 பேர் கைது


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 420 பேர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2018 4:00 AM IST (Updated: 31 Oct 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 420 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,


சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டப்பூர்வமான குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை 9 மாதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 2-வது நாளாக நேற்று தஞ்சை ரெயிலடி அருகே காந்திஜி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட தலைவர் உமா தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தினால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடுமாறு கூறினார்.

ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்துவிட்டனர். இதனால் நிர்வாகிகள் சிலரை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்ய முயற்சி செய்ததால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் நிர்வாகிகளை சந்தித்து போலீசார் பேசியதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை சத்துணவு ஊழியர்கள் கைவிட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 350 பெண்கள் உள்பட 420 பேரை போலீசார் கைது செய்து மினிபஸ்களில் ஏற்றி தஞ்சை வடக்குவாசலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த போராட்டத்தினால் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் சத்துணவு வழங்கும் பணி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாற்று ஏற்பாடாக தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு சத்துணவு வழங்கப்பட்டது. போராட்டத்தில் பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் கூட்டத்தை கலைப்பதற்காக வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது.

தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக நோயாளியை ஏற்றி கொண்டு 108 ஆம்புலன்ஸ் காந்திஜிசாலையில் வந்தது. அப்போது சாலையில் அமர்ந்து சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டதால் அந்த வழியாக செல்ல முடியவில்லை. உடனே டிரைவர் துரிதமாக செயல்பட்டு, ஆம்புலன்சை திருப்பி எம்.கே.மூப்பனார் சாலை, ஜி.ஏ.கெனால் சாலை வழியாக அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

Next Story