தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்
தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
பெரும்பாறை,
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரியூர், பெருங்கானல், பள்ளத்துகால்வாய், சேம்படிஊத்து உள்ளிட்ட வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. குறிப்பாக காட்டுயானைகள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. தோட்டங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வேலிகளை உடைக்கும் காட்டுயானைகள் அங்கு பயிரிடப்பட்டுள்ள காபி, வாழை, ஆரஞ்சு, மிளகு, அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக 4 காட்டுயானைகள் கல்லக்கிணறு பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள திருமுருகன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்குள் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி போன்றவற்றை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன. பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. வழக்கம்போல் தோட்டத்துக்கு வந்த திருமுருகன், பயிர்களை காட்டுயானைகள் சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
யானைகள் தொடர்ந்து இந்த பகுதியில் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இங்கு முகாமிட்டுள்ள யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story