பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலி: நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் - மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை


பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலி: நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் - மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 31 Oct 2018 4:14 AM IST (Updated: 31 Oct 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பால் 3 பேர் பலியாகி உள்ள நிலையில் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பால் 3 பேர் பலியாகி உள்ளனர். வத்திராயிருப்பை சேர்ந்த கிருஷ்ணம்மாள்(வயது 65), மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் புதன்கிழமை பலியானார். மேலும் ராஜபாளையம் சிவகாமிபுரத்தை சேர்ந்த என்ஜினீயர் பொன்குமார்(24), ராஜபாளையம் மலையடிப்பட்டியை சேர்ந்த மாரியம்மாள்(62) ஆகியோர் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் இறந்தனர்.

கடந்த காலங்களில் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் குறிப்பாக ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பலர் உயிரிழந்த நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தற்போதும் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் தான் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ராஜபாளையத்தை சேர்ந்த 2 பேர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர்.

மாவட்டத்தின் மேற்கு பகுதியில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 3 பேர் பலியாகி உள்ள நிலையில் இந்த நோய் பரவலாக ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் எடுக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதுபற்றி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பழனிச்சாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

ராஜபாளையம் பகுதியில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு உயிர் பலி ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் தற்போது உள்ள நிலையில் நோய் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனாலும் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து விருதுநகர் டாக்டர் ரத்தினவேல் கூறும்போது, விருதுநகர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறி தென்படும் நிலை உள்ளது. இந்த நோய்க்கு முறையான பரிசோதனை செய்வதற்கு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் வாய்ப்பு இல்லை. மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் இதற்கான வசதிகள் இருந்தாலும் அனைவராலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சென்று சோதனை செய்ய வாய்ப்பு ஏற்படாது.

எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும், இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

மாவட்ட சுகாதாரத்துறையினர் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை என தெரிவித்தாலும், மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உயிர் பலி ஏற்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் மூலம் மாணவ–மாணவிகளுக்கு இந்த நோய் தடுப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். மாவட்ட சுகாதாரத்துறையினரும், மாவட்டம் முழுவதும் நோய் பாதிப்பு இல்லை என்று இருந்து விடாமல் தடுப்பு நடவடிக்கைகளை தொடக்கத்திலேயே மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.


Related Tags :
Next Story